செய்திகள்

ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பல் 57 வருட சேவையுடன் அடுத்த வாரம் ஓய்வு

Published On 2017-02-27 15:30 GMT   |   Update On 2017-02-27 15:30 GMT
கடந்த 57 ஆண்டுகளாக இந்தியக் கடற்படையில் சேவையாற்றிய இந்தியப் போர்க் கப்பலான ஐ.என்.எஸ் விராட் அடுத்த வாரம் தனது பயணத்தை முடித்துக் கொள்கிறது.
மும்பை:

கடந்த 1959-ம் ஆண்டு தனது கடல் பயணத்தை தொடங்கிய ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பல், இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பியது உள்ளிட்ட பல பணிகளில் நாட்டுக்காக பணியாற்றியுள்ளது. தற்போது உலகத்தில் இருப்பதிலேயே மிகவும் பழமையான போர்க்கப்பல் இதுதான். இதனால், இக்கப்பலுக்கு கடற்படையிலிருந்து ஓய்வு அளிக்க பாதுகாப்புத் துறை முடிவு செய்தது.

விமானம் தாங்கி போர்க்கப்பலான விராட், 2,252 நாட்களை அதாவது 80,715 மணி நேரத்தை கடலில் செலவளித்துள்ளது. மேலும், 10,94,215 கடல் மைல் தொலைவுகளை விராட் போர்க்கப்பலானது கடந்துள்ளது. தற்போது கடற்படை தளபதியாக உள்ள சுனில் லாம்பா இப்போர்க்கப்பலில் பணியாற்றியவர். 150 அதிகாரிகள், 1500 கடற்படை ஊழியர்களை கொண்ட இக்கப்பல் தனது பயணத்தை அடுத்த வாரத்துடன் முடிக்க இருக்கிறது.



கடற்படையிலிருந்து ஓய்வு பெற்ற விராட் போர்க்கப்பலானது ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் கடற்கரையில் அருங்காட்சியகமாக மாற்றப்பட இருக்கிறது.

பல்வேறு நாடுகளின் கடற்படை அதிகாரிகளும் இக்கப்பலில் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இந்திய கடற்படையில் தற்போது ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பல் மட்டும் பணியில் உள்ளது. மேலும், ஒரு போர்க்கப்பல் கொச்சியில் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News