செய்திகள்

ஏரியில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலி

Published On 2017-02-27 06:04 GMT   |   Update On 2017-02-27 06:04 GMT
கர்நாடக மாநிலத்தில் ஏரியில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலியாயினர். காப்பாற்ற முயன்ற வாலிபர்களும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் களபுரகி புறநகர் பகுதியில் உள்ள இஸ்லாம்புற பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மகள் சிறுமி அமுர்துல் சபுரா(வயது 11). அதே பகுதியை சேர்ந்தவர் மரியம்மா(11). இவர்கள் 2 பேரும் தோழிகள். 2 பேரும் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர்.

நேற்று மாலையில் 2 பேரும் அதே பகுதியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. பின்னர் சிறிது நேரத்தில் அமுர்துல் சபுராவும், மரியம்மாவும் தண்ணீரில் மூழ்கியபடி தத்தளித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதி வழியாக காரில் சென்ற அலிகான் (29), சவுதூர் ரஹ்மான்(20) ஆகிய இருவரும் ஏரியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளையும் கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உடனே காரை நிறுத்தி விட்டு, அலிகான் மற்றும் சவுதூர் ரஹ்மான் காரில் இருந்து கீழே இறங்கி வந்து ஏரியில் குதித்து 2 சிறுமிகளையும் காப்பாற்ற முயன்றார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. எதிர்பாராதவிதமாக 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் களபுரகி புறநகர் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து பிளாஸ்டிக் படகு மூலம் சென்று நீண்ட நேரம் போராடி ஏரியில் இருந்து 4 பேர் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் 4 பேர் உடல்களும் களபுரகி அரசு மருத்துவமனையில் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News