செய்திகள்

காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்புபவர்களை தடுக்க மாட்டோம்: தேவேந்திர பட்னாவிஸ்

Published On 2017-02-26 04:10 GMT   |   Update On 2017-02-26 04:10 GMT
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுவதற்காக காங்கிரசுடன் கூட்டணி வைப்பவர்களை தடுக்க மாட்டோம் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மும்பை:

மராட்டியத்தில் மாநகராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பாரதிய ஜனதா மாபெரும் வெற்றி பெற்றது. இதனை நேற்று மும்பை தலைமை அலுவலகத்தில் வெற்றி தினமாக அக்கட்சியினர் கொண்டாடினர். இதில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விரும்புபவர்கள் செல்லட்டும். அவர்களை நாங்கள் பிடித்து நிறுத்தப்போவது இல்லை. நாங்கள் எங்கள் பாதையில் செல்வோம். எங்களுடன் வர விரும்புபவர்கள் வரலாம். கொள்கையுடன் கொள்கையாக போரிடும் கட்சி, பா.ஜனதா. மும்பை மாநகராட்சியில் அதிகாரத்தை கைப்பற்றினாலும் சரி, கைப்பற்றாவிட்டாலும் சரி, அதற்காக நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாகத்தை கைவிட மாட்டோம்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

அதாவது, மும்பை மாநகராட்சியில் 84 இடங்களை கைப்பற்றிய சிவசேனா, பா.ஜனதாவுடன் ஏற்பட்ட கசப்பு காரணமாக காங்கிரசுடன் கூட்டணி வைத்து மாநகராட்சியை கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதனை மனதில் வைத்தே முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இவ்வாறு கருத்து தெரிவித்தார். மும்பை மாநகராட்சியில் பா.ஜனதா 82 இடங்களை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News