செய்திகள்

லஞ்ச வழக்கில் சத்தீஸ்கார் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

Published On 2017-02-22 00:54 GMT   |   Update On 2017-02-22 00:54 GMT
சத்தீஸ்கார் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எல்.அக்ரவால் லஞ்ச வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள லஞ்சம் வழங்கும் போது சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
புதுடெல்லி:

சத்தீஸ்கார் மாநில முதன்மை செயலாளராக இருந்தவர் பி.எல்.அக்ரவால். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மீது 2010-ம் ஆண்டு சி.பி.ஐ. 2 வழக்குகளை பதிவு செய்தது. இதில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு வழக்கில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நொய்டாவை சேர்ந்த பகவான் சிங்கை, அக்ரவால் நாடினார். அவர், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்ததாக கூறப்படும் சையத் புர்கானுதீன் என்பவரை அக்ரவாலுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது சி.பி.ஐ. வழக்குகளில் இருந்து விடுவிக்க ரூ.1½ கோடியை அக்ரவாலிடம், சையத் புர்கானுதீன் லஞ்சமாக கேட்டார். இதையடுத்து 4 கட்டமாக ரூ.60 லட்சத்தை ரொக்கமாக அக்ரவால் கொடுத்தார். மீதி பணத்தை ரொக்கமாக கொடுக்க முடியாததால் 2 கிலோ தங்கமாக தருவதாக அக்ரவால் கூறினார். இது பற்றி தகவல் அறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள், லஞ்சம் கொடுத்த அக்ரவாலை நேற்று கைது செய்தனர். மேலும் லஞ்சம் வாங்கிய பகவான் சிங், சையத் புர்கானுதீன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 

Similar News