செய்திகள்

சித்தூர் அருகே கோடரியால் வெட்டி விவசாயி கொலை

Published On 2017-02-21 06:06 GMT   |   Update On 2017-02-21 06:06 GMT
சித்தூர் அருகே கோடரியால் வெட்டி விவசாயியை கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிய அமர்நாத்ரெட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:

சித்தூர் மாவட்டம் குலபலகோட்டா கவுனிவாரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கநாதரெட்டி (வயது 55), விவசாயி. இவருக்கு, அப்பகுதியில் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், அவர் விவசாயம் செய்து, குடும்பத்தை நடத்தி வந்தார். இவருடைய குடும்பத்தினரும், அண்ணன் அப்பல்ரெட்டியின் குடும்பத்தினரும் நெருக்கமாக இருந்து வந்தனர்.

ரெங்கநாதரெட்டியும், அவரின் அண்ணன் அப்பல்ரெட்டியின் மகனான அமர்நாத்ரெட்டியும் (32) சம்பவத்தன்று நிலத்துக்குச் சென்றனர். இருவரும், தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்காக குழாய் பொருத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கோடரியை எடுத்து வந்த அமர்நாத்ரெட்டி, ரெங்கநாதரெட்டியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அமர்நாத்ரெட்டி அங்கு இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

அக்கம் பக்கத்தில் வேலை பார்த்த விவசாயிகள் ஓடி வந்து ரெங்கநாதரெட்டியின் பிணத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் குரபலகோட்டா போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், முதிவேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வர்லு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து ரெங்கநாதரெட்டியின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய அமர்நாத்ரெட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News