செய்திகள்

தமிழக சிறைக்கு மாற்றக் கோரி சசிகலா மனுவா?: கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பதில்

Published On 2017-02-21 04:20 GMT   |   Update On 2017-02-21 04:20 GMT
பெங்களூருவில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றக் கோரி சிறைத்துறை அதிகாரியிடம் சசிகலா சார்பில் மனு கொடுத்திருப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்ய நாராயணராவ் பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் சாதாரண அறையில் சசிகலாவும், இளவரசியும் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கு தமிழகத்தில் தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. பின்னர் அந்த வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு தமிழகத்தில் தொடரப்பட்டதால் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி கர்நாடக சிறைத்துறை அதிகாரிகளிடம் கடிதம் கொடுக்க உள்ளதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக சசிகலா தனது வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா தன்னை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி கர்நாடக சிறைத்துறை அதிகாரியிடம் மனு கொடுத்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியானது. இதுபற்றி சசிகலாவின் வக்கீலிடம் கேட்டபோது, “மனு எதுவும் கொடுக்கவில்லை“ என்று கூறினார்.

அதுபோல, கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்ய நாராயணராவ் கூறுகையில், “பெங்களூரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றக் கோரி சசிகலா சார்பில் எந்த ஒரு மனுவோ, கடிதமோ சிறைத்துறை அதிகாரிகளிடம் இதுவரை வழங்கப்படவில்லை“ என்றார்.



இதற்கிடையில், சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசுவதற்காக அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று மாலையில் பரப்பன அக்ரஹாராவுக்கு காரில் வந்தார். பின்னர் அவர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு, அரசியல் நிலவரம் பற்றியும் சசிகலாவிடம் டி.டி.வி. தினகரன் பேசியதாக தெரிகிறது. அதன்பிறகு, சிறையில் இருந்து டி.டி.வி. தினகரன் புறப்பட்டு சென்றார். அவருடன் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தியும் உடன் வந்திருந்தார்.


சசிகலாவை பார்க்க வந்த, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்.

இதுபோன்று, மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் நேற்று சசிகலாவை பார்க்க பரப்பன அக்ரஹாராவுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் சசிகலாவை சந்தித்து பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும் சசிகலாவை பார்க்க டாக்டர் எஸ்.வெங்கடேஷ், இளவரசியின் மகன் விவேக், மருமகள் ஆகியோரும் வந்தனர். அவர்கள் அனைவரும் மதியம் 3.30 மணியளவில் சிறைக்குள் சென்று சசிகலாவை சந்தித்து பேசிவிட்டு இரவு 7.30 மணியளவில் வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் கார்களில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள்.

Similar News