செய்திகள்

ஜெயலலிதாவின் சொத்துகளை தெலுங்கானா அரசு கையகப்படுத்த கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Published On 2017-02-20 23:46 GMT   |   Update On 2017-02-20 23:46 GMT
ஜெயலலிதாவின் சொத்துகளை தெலுங்கானா அரசு கையகப்படுத்த கோரும் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது
புதுடெல்லி:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லாததால் தெலுங்கானா மாநிலம் மெட்சல் கிராமத்தில் உள்ள அவருக்கு சொந்தமான 14 ஏக்கர் விவசாய நிலத்தையும், ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள வணிக வளாகத்தையும் கையகப்படுத்துமாறு தெலுங்கானா அரசுக்கு உத்தரவிடக்கோரி ஐதராபாத்தைச் சேர்ந்த ‘கரீப் கைடு’ (ஏழையின் வழிகாட்டி) என்ற தன்னார்வ நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் ஜி.பார்கவி என்பவர் ஐதராபாத் ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு நீதிபதிகள், இந்த வழக்கு வெறும் விளம்பரத்துக்காக தொடரப்பட்டுள்ளது என்று கூறி மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்கள்.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சஞ்ஜய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Similar News