செய்திகள்

பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு

Published On 2017-02-20 16:25 GMT   |   Update On 2017-02-20 16:25 GMT
சொத்து குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை தினகரன் இன்று சந்தித்துப் பேசினார்.
பெங்களூர்:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைத்து குற்றம்சாட்டப்பட்ட அவரது தோழி சசிகலா நடராஜன் மற்றும் சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோரை குற்றவாளி என்று அறிவித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா முன்னர் தீர்ப்பளித்திருந்த 4 ஆண்டு சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சரண்டைவதற்கு முன்னதாக, தனது நெருங்கிய உறவினரான தினகரன் என்பவரை அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்தார்.

முன்னதாக, தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை அடுத்து தமிழ்நாடு சட்டசைபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தலைவராக தனது தீவிர விசுவாசியான எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா அறிவித்திருந்தார்.

தமிழக முதல்வராக அவர் பதவியேற்று கொண்டதையடுத்து, சட்டசபையில் அவரது தலைமையிலான ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவானதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்நிலையில், இன்று மாலை சுமார் ஐந்து மணியளவில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்த அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன், தமிழ்நாட்டு அரசியல் நிலவரங்கள் தொடர்பாக சசிகலாவை சந்தித்து, சுமார் அரை மணி நேரம் விளக்கம் அளித்ததாக பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News