செய்திகள்

கேரளாவில் ‘புன்னகை’ திட்டத்தின் மூலம் முதியோருக்கு இலவச பல் செட்

Published On 2017-02-17 05:07 GMT   |   Update On 2017-02-17 05:07 GMT
கேரள சமூக நலத்துறையின் சார்பில் ‘புன்னகை’ என்ற திட்டத்தின் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு இலவச பல் செட் இந்த ஆண்டு 1500 பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் நலம்பெற ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் இலவச திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

கேரளாவில் ஆட்சியில் உள்ள பினராயி விஜயன் தலைமையிலான அரசும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் முதியோர்களுக்கு இலவச பல் செட் வழங்கும் புதுமையான திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதற்காக கேரள சமூக நலத்துறையின் சார்பில் ‘புன்னகை’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு இந்த இலவச பல் செட் வழங்கப்படும்.

முதல்கட்டமாக இந்த ஆண்டு 1500 பேருக்கு இலவச பல் செட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த தனியார் பல் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவமனைகள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு அறிவித்து உள்ளது. இந்த பல் மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகளுக்கு சென்று தகுதியானவர்கள் பல் செட்டுகளை பொருத்திக் கொள்ளலாம்.

அதன்பிறகு இதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அரசே செலுத்தி விடும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புகிறவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறை மூலம் விண்ணப்பம் செய்து சான்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Similar News