செய்திகள்

ஊழலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: வக்கீல் பேட்டி

Published On 2017-02-15 09:57 GMT   |   Update On 2017-02-15 09:57 GMT
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது என இந்த வழக்கில் தி.மு.க. தரப்பில் வாதாடிய வக்கீல் பாலாஜிசிங் தெரிவித்தார்.
பெங்களூரு:

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது என இந்த வழக்கில் தி.மு.க. தரப்பில் வாதாடிய வக்கீல் பாலாஜிசிங் தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் நமது நாட்டின் நீதி, நியாயம் நிலை நாட்டப்பட்டுள்ள என்பது உறுதியாகியுள்ளது. சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதன் மூலம் ஊழலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற பாடத்தை கற்றுத் தந்துள்ளது.

இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும். இனிமேல் யாரும் ஊழலில் ஈடுபட மாட்டார்கள். அதற்கு இடைத்தரகர்களாக ஈடுபட்டால் தண்டனை கட்டாயம் என்பதும் தீர்ப்பில் உறுதியாகியுள்ளது.

20 ஆண்டுகாலமாக நடைபெற்ற வழக்கில் நீதி வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பில் சிலர் வழக்கை திசைமாற்ற முயற்சித்தனர். அப்போது, தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து வழக்கு விசாரணையை பெங்களூருக்கு மாற்றினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News