செய்திகள்

சசிகலா முதல்வராக பதவி ஏற்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் மனு

Published On 2017-02-06 13:40 GMT   |   Update On 2017-02-06 13:40 GMT
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதலமைச்சராக பதவியேற்க தடை விதிக்குமாறு, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
புதுடெல்லி:

அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா அக்கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவர் விரைவில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அதற்காக, முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா கடிதத்தை நேற்று ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். ஆளுநரும், ஓ.பன்னீர் செல்வத்தின் ராஜினாமா ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தார்

இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு அடுத்த வாரம் வெளியிட உள்ள நிலையில், தீர்ப்பு வெளியிடும் வரை சசிகலா முதலமைச்சராக பதவியேற்கக் கூடாது எனவும், அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமானம் செய்து வைக்க தடை விதிக்கக் கோரியும் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினர் உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 

இம்மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News