செய்திகள்

ஓட்டுப்பதிவு முடிந்தது: கோவாவில் 83%, பஞ்சாப் மாநிலத்தில் 66% வாக்குப்பதிவு

Published On 2017-02-04 12:57 GMT   |   Update On 2017-02-04 12:57 GMT
5 மாநில சட்டமன்றத் தேர்தலில் இன்று முதல்கட்டமாக பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவாவில் அதிகபட்சமாக 83 சதவீத வாக்குகளும், பஞ்சாப் மாநிலத்தில் 66 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
லூதியானா:

கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ், ஆளும் ஷிரோமணி அகாலிதளம்-பா.ஜ.க. கூட்டணி மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 1145 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 40 தொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்தில் 250 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

கோவாவில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பஞ்சாப் மாநிலத்தில் மோசமான வானிலை காரமாக ஒரு மணி நேரம் தாமதமாக, அதாவது காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் சற்று மந்தமாக இருந்தாலும் நேரம் செல்லச் செல்ல வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்து.

ஒருசில இடங்களில் நடந்த பிரச்சினைகளைத் தவிர மற்றபடி வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 5 மணிக்கு வரிசையில் காத்து நின்றவர்கள் வாக்களிக்க வசதியாக அவர்களுக்கு மட்டும் டோக்கன் கொடுக்கப்பட்டு, வாக்களிக்க வசதியாக கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரையில் காலை 10 மணி நிலவரப்படி 10 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. 12 மணியளவில் 30 சதவீத வாக்குப்பதிவு இருந்தது. 3 மணி நிலவரப்படி அது 56.9 ஆக உயர்ந்தது. 5.30 மணி நிலவரப்படி 66 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியானது. எனினும், மீதமுள்ள வாக்காளர்கள் வாக்களித்து முடித்ததும், அனைத்து வாக்குச்சாடிகளிலும் பதிவான வாக்குகளை தேர்தல் ஆணையம் கணக்கிட்டு சரியான வாக்குப்பதிவு விவரத்தை பின்னர் வெளியிடும்.

இதேபோல் கோவா மாநிலத்திலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 67 சதவீதமாக இருந்தது. மாலை வாக்குப்பதிவு முடிவடைந்தபோது 83 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியானது. கடந்த தேர்தலில் 81.7 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. 

Similar News