செய்திகள்

சேவை வரி 18 சதவீதமாக உயர்கிறது: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல்

Published On 2017-01-29 15:07 GMT   |   Update On 2017-01-29 15:07 GMT
நாடு முழுவதும் சேவை வரியை 16% முதல் 18% வரை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:

ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து நாடு முழுவதிலும் ஒரே மாதிரியான வரி விதிப்பிற்கான ஜி.எஸ்.டி முறையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இம்முறையில் பொருட்களின் தண்மைக்கேற்ப 5%, 12%, 18%, 28% ஆகிய விகிதங்களில் வரி வசூலிக்கப்படுகின்றன.

இதனிடையே, ஜி.எஸ்.டி சட்டத்திற்கு முன்னோட்டமாக சேவை வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்தபட்சம் 16% முதல் அதிகபட்சமாக 18% வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனினும் இது குறித்த முழுமையான அறிவிப்பு, பிப்ரவரி 1-ம் தேதியில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில்தான் தெரியவரும்.

இதனால், விமான டிக்கெட் கட்டணம், ஹோட்டல் உணவு கட்டணம் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்குமான கட்டணங்கள் உயர்ந்து விடும். ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமலுக்கு வந்ததும், ஜி.எஸ்.டி.யில் முன்மொழியப்பட்ட வரிவிகிதங்களை, தற்போது உள்ள சேவை வரி விகிதம் நெருங்கி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் சேவை வரி 15 சதவீதமாக உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் 12.36%-ஆக இருந்த சேவைவரி 14%-ஆக அதிகரிக்கப்பட்டது. பின்னர், தூய்மை இந்தியா திட்டத்திற்காக 0.5%-மும், கிரிஷ் கல்யான் என்ற பெயரில் 0.5%-மும் சேவை வரி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News