செய்திகள்

ரூபாய் நோட்டு தடை ‘வழிகாட்டுதல் இல்லாத ஏவுகணை தாக்குதல் போன்றது’: அமர்த்யா சென்

Published On 2017-01-29 02:48 GMT   |   Update On 2017-01-29 02:48 GMT
உயர்மதிப்பு கொண்ட 500, 1000 ரூபாய் நோட்டு மீதான தடை ‘வழிகாட்டுதல் இல்லாத ஏவுகணை தாக்குதல் போன்றது’ என நோபல் பரிசு பெற்ற இந்தியர் அமர்த்யா சென் தெரிவித்தார்.
மும்பை:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அதிரடியாக ரூ.1,000, ரூ.500 நோட்டுகளுக்கு தடை விதித்தார். அதன் தாக்கம் இன்னும் தொடர்கிறது.

இந்த நிலையில் மும்பையில் ‘அனைவருக்கும் சுகாதார காப்பீடு: ஏன், ஏப்படி?’ என்ற தலைப்பில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அமர்த்யா சென் பேசினார்.

அவர் முடிவுகள் எடுப்பதில் கம்யூனிச நாடான சீனாவுடன், ஜனநாயக நாடான இந்தியாவை ஒப்பிட்டு கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர் உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு தடை பற்றி குறிப்பிடுகையில், “அரசாங்கம் அப்போதும், இப்போதும் (வழிகாட்டுதல் இன்றி) ஏவுகணைகளை தன் இஷ்டப்படி ஏவி தாக்குகிறது. அது போன்ற ஒரு தாக்குதல்தான், ரூபாய் நோட்டுகள் மீதான தடையும்” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “ரூபாய் நோட்டுகள் தடையால் பொதுமக்கள் படுகிற சிரமங்கள், கஷ்டங்கள் குறித்து செய்திகள் வெளியாகின. ஆனால், ஏவுகணை தரையில் வந்து விழுந்ததா என்றுதான் தெளிவாக தெரியவில்லை” என விமர்சித்தார்.

Similar News