செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிப்பு

Published On 2017-01-27 16:15 GMT   |   Update On 2017-01-27 16:15 GMT
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டை கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.
பெங்களூரு:

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் லண்டனில் குடியேறி விட்டார். அவர் இந்தியாவில் இருந்தபோது, ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த தனது மதுபான நிறுவன ஈவு பங்குகளை, கோர்ட்டுக்கு அளித்த உத்தரவாதத்தை மீறி, இங்கிலாந்து மதுபான நிறுவனத்துக்கு மாற்றி கொடுத்தார்.

எனவே, உறுதிமொழியை மீறியதற்காக, விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணையில், விஜய் மல்லையா தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், நீதிபதிகள் ஜெயந்த் பட்டேல், அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று இம்மனு விசாரணைக்கு வந்தது. விஜய் மல்லையாவுக்கு எதிராக, ஜாமீனில் விடக்கூடிய கைது வாரண்டு பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த கட்ட விசாரணையை 17–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Similar News