செய்திகள்

மராத்தான் காதல்: எல்லை கோட்டில் தாலி கட்டும் மணமகன்

Published On 2017-01-27 15:04 GMT   |   Update On 2017-01-27 15:04 GMT
மராத்தான் போட்டியை தவிர்க்க முடியாமல் பந்தையத்தின் எல்லை கோட்டில் மணமகளுக்கு தாலி கட்ட மணமகன் திட்டமிட்டுள்ளார்.
ஜெய்ப்பூர்:

மராத்தான் பந்தயமும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதியும் ஒரே நாள் என்பதால் இரண்டையும் ஒரே சமயத்தில் மேற்கொள்ள பெங்களூருவை சேர்ந்த ஜோடி முடிவு செய்துள்ளனர். பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் அரை மராத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் திரிவேதி என்பவர் மராத்தான் பந்தையத்தின் எல்லை கோட்டிலேயே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

பெங்களூருவில் உணவகம் நடத்தி வரும் பொறியாளரான திரிவேதி 8-வது ஜெய்ப்பூர் அரை மராத்தான் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். மராத்தான் போட்டியும் திருமணம் நடைபெற இருக்கும் தேதியும் ஒன்று என்பதால் திரிவேதி மற்றும் மணப்பெண் இருவரும் பந்தயத்தின் எல்லை கோட்டில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

'நானும் எனக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட பெண்ணும் ஓட்ட பந்தய வீரர்கள். அவர் காயம் காரணமாக பந்தயத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் நாங்கள் மராத்தான் எல்லை கோட்டிலேயே மாலையை மாற்றி கொள்ள முடிவு செய்துள்ளோம். இது ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த சமூகத்திற்கான பாடமாக இருக்கும்', என திரிவேதி தெரிவித்துள்ளார்.

மராத்தான் மைதானத்தில் நடைபெற இருக்கும் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் 25 பேர் வரை கலந்து கொள்வர். மராத்தான் எல்லை கோட்டில் நடைபெற்றாலும் இந்த திருமணம் இந்து முறைப்படியே நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் வரை மூன்று முழு மராத்தான் மற்றும் நான்கு அரை மராத்தான் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள திரிவேதி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூருவில் இருந்து ஜெய்ப்பூர் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நிதி திரட்டினார்.

Similar News