செய்திகள்

வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் பதவி காலம் நீட்டிப்பு

Published On 2017-01-24 00:19 GMT   |   Update On 2017-01-24 00:19 GMT
மத்திய வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த சுப்ரமணியம் ஜெய்சங்கரின் பதவி காலம் மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய வெளியுறவுத்துறையின் செயலாளராக சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். 

இந்திய வெளியுறவுத்துறையின் மூன்றாவது பெண் செயலாளரான சுஜாதா சிங், அப்பதவியில் இருந்து கட்டாய விலக்கு வாங்கிக் கொண்டதை தொடர்ந்து ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். 

அதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை செயலாளர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், ஜெய்சங்கரின் 2 ஆண்டு கால பதவிக்காலம் முடிவு பெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அவரது பதவிக் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

அவரது பதவிக்காலம் மத்திய அரசால் மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு(2018) ஜனவரி 28-ம் தேதி வரை அவர் இந்த பதவியில் இருப்பார்.

கடந்த 2009-ம் ஆண்டு வெளியுறவுத் துறை செயலாளர் பதவிக் காலம் 2 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு, முதல் முறையாக பதவி நீட்டிப்பு செய்யப்படும் அதிகாரி இவர் தான்.

ஜெய்சங்கரின் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்த பதவிக்கான காத்திருப்போர் பட்டியலில் உள்ள மூத்த அதிகாரிகள் மேலும் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனிடையே, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலாளர் சக்திகாந்த் தாஸின் பதவிக்காலம் மேலும் 3 மாத காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சக்திகாந்த் தாஸூம் வரும் பிப்ரவரி 28-ம் தேதி உடன் ஓய்வு பெற இருந்தார்.

Similar News