செய்திகள்

சமாஜ்வாடி தேர்தல் அறிக்கை: ஸ்மார்ட் போன் உள்பட ஏராளமான சலுகைகள் அறிவிப்பு

Published On 2017-01-23 22:37 GMT   |   Update On 2017-01-23 22:37 GMT
சமாஜ்வாடி தேர்தல் அறிக்கையில் ஏழை பெண்களுக்கு இலவச பிரஷர் குக்கர், பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், ஸ்மார்ட் போன் என ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
லக்னோ:

சமாஜ்வாடி தேர்தல் அறிக்கையில் ஏழை பெண்களுக்கு இலவச பிரஷர் குக்கர், பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், ஸ்மார்ட் போன் என ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி முடிய 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

நேற்றுமுன்தினம் காலை அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையை லக்னோ நகரில் நடந்த கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் வெளியிட்டார். இதில், அவருடைய மனைவியும் கன்னோஜ் தொகுதி எம்.பி.யுமான டிம்பிள் யாதவ், மாநில மந்திரிகள், மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தனது தந்தை முலாயம் சிங்கை மந்திரி முகமது ஆசம் கான் மூலம் சமாதானப்படுத்தி வரவழைக்க அகிலேஷ் யாதவ் தீவிர முயற்சி மேற்கொண்டார். இதனால் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் ஒரு மணி வரை அவர் காத்திருந்தார்.

ஆனால் தேர்தல் அறிக்கை வெளியீட்டு கூட்டத்தில் கலந்துகொள்ள முலாயம் சிங் மறுத்துவிட்டார்.

இதையடுத்து அகிலேஷ் யாதவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் சமாஜ்வாடி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை செயல்படுத்துவோம் என்று ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கிறது.

சமாஜ்வாடி வெளியிட்ட 32 பக்க தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அனைத்து ஏழை பெண்களுக்கும் இலவச பிரஷர் குக்கர்.

* 1 கோடி ஏழைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.500-ல் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

* அரசு பஸ்களில் பயணம் செய்யும் அனைத்து பெண்களுக்கும் 50 சதவீத மானியம்.

* அனாதை, மாற்றுத்திறனாளி, விதவை பெண்களின் திருமணத்துக்கு ஒரு வீட்டுடன் உதவித்தொகை ரூ.2 லட்சம்.

* கிராமப்புற மாணவிகள் அனைவருக்கும் இலவச சூரிய ஒளி சக்தி மின்விளக்கு.

* 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்.

* அனைத்து ஏழை முஸ்லிம் பெண்களுக்கும் இ-ரிக்‌ஷா.

* மானிய அடிப்படையில் குறைந்த வட்டியில் பெண்களுக்கு கடன்.

* பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் விரைவு கோர்ட்டுகள், போலீஸ் நிலையங்கள்.

* வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அனைத்து நகரங்களிலும் தங்கும் விடுதி.

* ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ளோருக்கு அனைத்து நோய்களுக்கும் அரசு உதவியுடன் இலவச சிகிச்சை.

* அரசு ஆரம்ப பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க ஒரு லிட்டர் நெய், பால்பவுடர்.

* விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன் உதவி.

* சிறுபான்மையினருக்கு சிறுதொழில்கள் மூலம் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்.

* அனைத்து ஏழை குடும்பத்தினருக்கும் இலவச ஸ்மார்ட் போன்.

* விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மின்சாரம்.

* இளம் வக்கீல்களுக்கு மாதாந்திர நிதி உதவி.

* 60 வயதுக்கு உட்பட்ட வக்கீல்கள் இறக்க நேர்ந்தால் தலா ரூ.10 லட்சம்.

* மின்சாரம் இல்லாத அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி.

* அனைத்து அரசு சேவைகளையும் இணையதளம் வழியாக நடத்த ஏற்பாடு.

மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று உள்ளன. 

Similar News