செய்திகள்

அசாம்: போராளிகளுடன் துப்பாக்கிச் சண்டை - இரு வீரர்கள் படுகாயம்

Published On 2017-01-22 10:30 GMT   |   Update On 2017-01-22 10:30 GMT
அசாம் மாநிலத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வாகனம் மீது இன்று கையெறி குண்டுகளை வீசி போராளிகள் தாக்கியதால் அங்கு இருதரப்பினருக்கும் இடையேயான கடுமையான துப்பாக்கிச் சண்டையில் இரு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
கவுகாத்தி:

போடோ மற்றும் உல்பா உள்ளிட்ட போராளி குழுக்களின் ஆதிக்கம் நிறைந்த அசாம் மற்றும் அருணாசலப்பிரதேசம் மாநில எல்லைப்பகுதியான துன்சுக்யா மாவட்டம், பராபச்தி நெடுஞ்சாலை வழியாக இன்று காலை அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் வாகனங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வாரா என்ற கிராமத்தின் அருகே மறைந்திருந்த போராளிகள், ரோந்து வாகனங்களின்மீது கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால், நிலைகுலைந்த அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் வாகனங்களை விட்டு இறங்கி போராளிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த இரு வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்துக்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Similar News