செய்திகள்

பாராளுமன்ற துணை சபாநாயகரால் பிரதமரை சந்திக்க முடியவில்லை: மோடி மீது தம்பித்துரை காட்டம்

Published On 2017-01-21 10:27 GMT   |   Update On 2017-01-21 10:27 GMT
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்களாலும், பாராளுமன்ற துணை சபாநாயகரால் பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை என்றால் எப்படி? என்று தம்பித்துரை கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி:

உச்ச நீதிமன்ற தடை காரணமாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாததால் கொதித்தெழுந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெற வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற முழக்கம் நாளுக்கு நாள் வலுத்துள்ள நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்  செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அவர், தமிழகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்பதாக கூறினார்.

பின்னர் தமிழக அரசு அளித்த அவசர சட்ட வரைவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. பின்னர் அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பாராளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் இன்று பிற்பகல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். அப்போது, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையிலான அவசர சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அ.தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியலமைப்பு சட்டத்தின்படி, விலங்குகள் தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. எனவேதான், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசர சட்டத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும் என தமிழக அரசு காத்திருக்கிறது.

இதற்கு முன்னர், மத்தியில் தி.மு.க. அங்கம்வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க எதுவுமே செய்யப்படவில்லை. தற்போதைய பா.ஜ.க. அரசும் எங்களுக்கு உதவவில்லை. எனவேதான், தற்போது அவசர சட்டம் இயற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

நாம் அனைவருமே இந்தியர்கள், அதே சமயத்தில் மாநில மக்களின் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு பாதுகாப்பு தேவை. ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை திணிக்க முயன்றால் அது ஆபத்தான எதிர்விளைவை ஏற்படுத்தி விடும்.

கூட்டாட்சி முறையை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில் நாட்டில் உள்ள பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

கடந்த ஓராண்டு காலமாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு எங்கள் கட்சியின் எம்.பி.க்கள் பலமுறை முயன்றனர். ஆனால் எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்களாலும், பாராளுமன்ற துணை சபாநாயகரால் பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது. நாங்கள் தேடிவரும்போது எங்களுக்கு உதவ பிரதமர் முன்வர வேண்டும்.

இதில் மத்திய அரசு தவறும்போது என்ன நேரிடும்? என்பதை தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க தமிழ்நாட்டு வீதிகளில் போராடிவரும் லட்சோப மக்கள் உணர்த்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News