செய்திகள்

காஷ்மீரில் சிறுத்தை தாக்கி 12 வயது சிறுவன் பலி

Published On 2017-01-21 10:10 GMT   |   Update On 2017-01-21 10:10 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் டோடா மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி 12 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெய்துவரும் கடுமையான உறைப்பனி காரணமாக காட்டுக்குள் வாழும் கொடிய விலங்கினங்கள் உணவை தேடி, அருகாமையில் உள்ள கிராமங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன.

இந்நிலையில், இங்குள்ள டோடா மாவட்டத்தின் நால்வா கிராமத்தை சேர்ந்த சஹில் அஹமது என்ற 12 வயது சிறுவன் நேற்றிரவு இயற்கை உபாதையை கழிப்பதற்காக தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள வயல்காட்டுக்கு சென்றான்.

வெகுநேரம் ஆகியும் அவன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் டார்ச் விளக்குகளின் வெளிச்சத்தில் சஹில் அஹமதை தேடி வயல்காட்டுக்கு சென்றனர். அப்போது அங்குள்ள புதருக்கு அருகாமையில் சஹில் அஹமதை ஒரு சிறுத்தை கடித்து தின்று கொண்டிருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவனது தலையில் இருந்து வயிற்றுப்பகுதி வரை பாதி உடலை தின்று தீர்த்துவிட்ட அந்த சிறுத்தை, திரண்டு வந்திருந்த கும்பலை கண்டதும், அங்கிருந்து தப்பியோடி விட்டது.

இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் சிறுவனின் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News