செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வடமாநிலங்களிலும் வலுக்கும் போராட்டம்

Published On 2017-01-20 11:23 GMT   |   Update On 2017-01-20 11:23 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வடமாநில மக்களும் களமிறங்கியுள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வடமாநிலங்களிலும் வீரியம் அடைந்துள்ளது.
குஜராத்:

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் இளைஞர்கள் நான்காவது நாளாக போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக இன்று வியாபாரிகள் கடையடைப்பு செய்தும், 1௦-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தமும் அறிவித்துள்ளன.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சமடைந்துள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்களின் போராட்டத்திற்கு தேசிய ஊடகங்களும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

இந்நிலையில் வடமாநிலங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் வீதிகளில் இரங்கி போராடி வருகின்றனர். குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள காந்தி சிலையின் அருகில் 'i support jallikattu' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராடி வருகின்றனர்.

இதுபோல மும்பை மக்களும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சாலைகளில் மனித சங்கிலி அமைத்து போராடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் ஜல்லிக்கட்டுக்கு அதரவு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுபோல இலங்கை, அமெரிக்கா, லண்டன், துபாய், சிங்கப்பூர் போன்ற உலக நாடுகளிலும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் வகையில் மக்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News