செய்திகள்

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் ஊழல் இல்லாத முதல் மாநிலமாக மாறும் - கெஜ்ரிவால்

Published On 2017-01-18 11:48 GMT   |   Update On 2017-01-18 11:48 GMT
பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாட்டிலேயே ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
சண்டிகர்:

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் தொடங்குகிறது. ஆம் ஆத்மி கட்சியானது பஞ்சாப், கோவா தேர்தல்களில் மட்டும் போட்டியிடுகிறது. மற்ற மாநிலங்களில் பா.ஜ.க.வை எதிர்த்து பிரச்சாரம் மட்டும் செய்யப்போவதாக அக்கட்சி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த பார் அசோசியேசன் கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கினைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், “பஞ்சாபில் கொலை, கொள்ளைகள் 
அதிகரித்துவிட்டன. இதைத் தடுக்க அதிகாரிகள் பயப்படுகின்றனர். ஏனென்றால், ஆட்சியில் இருப்பவர்கள் தான் தவறு செய்பவர்களை பாதுகாத்து வருகின்றனர்.

டெல்லி அரசின் எல்லா செயல்பாடுகளையும் மத்திய பா.ஜ.க அரசு தடுத்து வருகிறது. ஆனால், பஞ்சாபில் முழு சுதந்திரத்துடன் அரசு செயல்படமுடியும் என்பதால் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பஞ்சாபை நாட்டில் ஊழலற்ற முதல் மாநிலமாக மாற்றுவோம்.” என கூறினார்.

மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

Similar News