செய்திகள்

டெல்லி-வாஷிங்டன் இடையே ‘நான்ஸ்டாப்’ விமான சேவை: ஜூலை மாதம் தொடங்க ஏர் இந்தியா முடிவு

Published On 2017-01-16 10:20 GMT   |   Update On 2017-01-16 10:20 GMT
டெல்லி-வாஷிங்டன் வழித்தடத்தில் வரும் ஜூலை மாதம் முதல் இடைநில்லா நேரடி விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்க உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் முக்கிய நகரங்களுக்கான இடைநில்லா நேரடி விமான சேவையை விரிவாக்கம் செய்துவருகிறது. அவ்வகையில் தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு நேரடி விமான சேவையை தொடங்க ஏற்பாடு செய்துள்ளது.

டெல்லி-வாஷிங்டன் இடையிலான இந்த இடைநில்லா விமான சேவையானது வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. வாரத்தில் மூன்று முறை விமானங்கள் இயக்கப்படும். இதற்காக இந்த வழித்தடத்தில் போயிங் 777 விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

ஏற்கனவே நியூயார்க், நேவார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களுக்கு ஏர் இந்தியா இடைநில்லா விமானசேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அகமதாபாத்தில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு ஒரு விமானம் இயக்கப்படுகிறது. இது லண்டனில் மட்டும் நின்று செல்கிறது.

இடைநில்லா விமான சேவைகளால் பயண நேரம் கணிசமாக மிச்சமாவதால் இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News