செய்திகள்

ஹஜ் மானியம் ஒழிப்பு: உயர்மட்ட ஆலோசனை கமிட்டியை நியமித்து மத்திய அரசு உத்தரவு

Published On 2017-01-14 08:02 GMT   |   Update On 2017-01-14 08:02 GMT
இந்தியாவில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை விலக்கிக்கொள்வது தொடர்பாக பரிந்துரை செய்ய உயர்மட்ட ஆலோசனை குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
புதுடெல்லி:

முஹம்மது நபியின் பிறப்பிடமான மக்கா நகரம் மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மதினா ஆகிய இடங்களுக்கு இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் புனித ‘ஹஜ் பயணம்’ மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து இந்த (2017) ஆண்டு ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை 1.70 லட்சமாக உயர்த்தி சமீபத்தில் சவுதி அரேபியா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறு செல்லும் இந்திய இஸ்லாமியர்களுக்கு விமான கட்டணத்தில் சலுகை, சவுதி அரேபியாவில் சாலைவழி போக்குவரத்து கட்டணத்தில் சலுகை, தங்குமிடம், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் வாங்க சலுகை என மத்திய அரசு ஒவ்வொரு ஹ்ஜ் பயணிக்கும் சுமார் 75 ஆயிரம் ரூபாய்வரை மானியமாக வழங்கி வந்துள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஹஜ் பயணிகளும், 2008-ம் ஆண்டுவரை சுமார் ஒன்றரை லட்சம் ஹஜ் பயணிகளும் ஆண்டுதோறும் இந்த மானிய சலுகையின் பலன்களை அடைந்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த மானிய முறையை மத்திய அரசு ஒழிக்க வேண்டும் என கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணத்துக்காக அளிக்கப்படும் இந்த மானிய முறையை படிப்படியாக குறைத்து, வரும் 2022-ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழித்துவிட்டு, அந்த தொகையை கொண்டு இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மக்களின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் (2022) ஹஜ் மானிய முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியுள்ளதால் இது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை கூற அதிகாரம் படைத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் ஆங்கிலோ - இந்திய சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நக்வி, இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த இந்திய ஹஜ் கமிட்டிக்கு பரிபூரண உரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், மானிய முறையை நீக்கினால் குறைந்த கட்டணத்திலோ, மற்றவர்களுக்கு இணையான சமசரிவிகித கட்டணத்திலோ ஹஜ் பயணம் செல்வது தொடர்பாக பரிந்துரைப்பதற்காக மத்திய அரசு அமைத்துள்ள இந்த அதிகாரம் படைத்த உயர்மட்ட ஆலோசனை குழுவில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் இதர தரப்பினரும் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News