செய்திகள்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி டெல்லியில் நடந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

Published On 2017-01-05 23:59 GMT   |   Update On 2017-01-05 23:59 GMT
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி டெல்லியில் நடந்த உண்ணாவிரத போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
புதுடெல்லி:

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி டெல்லியில் நடந்த உண்ணாவிரத போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பழரசம் வழங்கி போராட்டத்தை முடித்து வைத்தார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு பேரவையினர் டெல்லியில் கடந்த 2-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் இந்த போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் நிலவும் கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவின் காரணமாக உண்ணாவிரதத்தின் 4-வது நாளான நேற்று உண்ணாவிரதம் இருந்த இளைஞர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் மயங்கி விழுந்தார்.

இந்த நிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு முயற்சிகள் எடுக்கும் என்று உறுதி அளித்தார்.

மேலும் உண்ணாவிரதம் இருந்த இளைஞர்கள் அனைவரும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை ஏற்று ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு பேரவையினர் தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அவர்களுக்கு பழரசம் அளித்து பொன்.ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். 

Similar News