செய்திகள்

பேரணியில் கலந்து கொண்ட கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு

Published On 2017-01-01 14:43 GMT   |   Update On 2017-01-01 14:43 GMT
ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்திற்கு எதிராக அரியானாவில் நடைபெற்ற எதிர்ப்பு பேரணியின்போது கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீசப்பட்டது.
ரோஹத் (ஹரியானா):

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து அரியானா மாநிலத்தில் உள்ள ரோஹத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி நடத்தினார்கள். இதில் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது தாத்ரி மாவட்டத்தைச் சேர்ந்த விகாஸ் குமார் என்பவர் ஷூவை தூக்கி கெஜ்ரிவாலை நோக்கி வீசினார். ஆனால் ஷூ அவர் மீது படாமல் மேடையில் விழுந்தது. உடனடியாக அங்கிருந்தது ஆம் ஆத்மி தொண்டர்கள் விகாஸை சூழ்ந்து தாக்குதல் நடத்தினார்கள்.

அந்நேரத்தில் போலீசார் தொண்டர்களிடம் இருந்து விகாஸை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து கெஜ்ரிவால் கூறுகையில் ‘‘மோடி ஒரு கோழை என்று நான் சொல்கிறேன். இன்று சில மோடி ஆதரவாளர்கள் என் மீது ஷூவை தூக்கி எறிந்தார்கள். மோடி அவர்களே, எங்களாலும் இதைச் செய்ய முடியும். எங்களுடைய கலாச்சார மதிப்பு இதுபோன்ற செயலை செய்ய விடவில்லை.

உங்களுடைய சி.பி.ஐ. சோதனை, ஷூ தாக்குதல் போன்ற சம்பவங்களையும் மீறி பண ஒழிப்பு ஊழலுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வருவேன்’’ என்றார்.

Similar News