செய்திகள்

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 1-ந் தேதி முதல் தளர்த்தப்படுகிறது: மத்திய மந்திரி தகவல்

Published On 2016-12-30 02:53 GMT   |   Update On 2016-12-30 03:44 GMT
வங்கிகளில் பழைய ரூ.500, 1000 நோட்டுகளை செலுத்துவதற்கான காலக்கெடு இன்று முடிகிறது. ஜனவரி 1-ந் தேதி முதல், பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய மந்திரி சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி அதிரடியாக அறிவித்தார்.

வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ந்தேதி (இன்று) வரை செலுத்தலாம் என்ற காலக்கெடுவையும் அவர் விதித்தார். மத்திய அரசு வழங்கிய 52 நாள் கால அவகாசம் இன்றுடன் முடிகிறது.

வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு கடைசி நாளான இன்று மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே வங்கிகள் கூடுதல் நேரம் இயங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

வங்கிகளில் செல்லாத பழைய ரூபாய்களை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தாலும், ரிசர்வ் வங்கியில் மார்ச் 31-ந் தேதிவரை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் பழைய ரூபாய் நோட்டுகள் எப்படி வந்தது? என்பதற்கான ஆதாரத்தை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு, ஜனவரி 1-ந் தேதியில் இருந்து தளர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதித்துறை இணை மந்திரி சந்தோஷ் கங்வார் நேற்று தெரிவித்தார்.

ஒரு தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான 4 அச்சகங்களிலும் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தினந்தோறும் 25 கோடி முதல் 30 கோடி எண்ணிக்கை கொண்ட புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

எனவே, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசவுகரியங்கள், டிசம்பர் 30-ந் தேதிக்கு பிறகு குறையும். ஜனவரி 1-ந் தேதியில் இருந்து, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவுக்கு முன்கூட்டியே அச்சிடப்படாததற்கு என்ன காரணம் என்றால், செல்லாத நோட்டு பற்றிய அறிவிப்பு, முன்கூட்டியே கசிந்து விடும் என்பதால்தான்.

அதிலும், புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, நவம்பர் 10-ந் தேதிக்கு பிறகுதான் தொடங்கியது.

முற்றிலும் ரொக்கம் இல்லா பரிமாற்றத்தை கொண்டு வருவது அரசின் நோக்கம் அல்ல. குறைந்த அளவில் ரொக்கத்தை பயன்படுத்தும் முறையை கொண்டு வருவதற்கே முயன்று வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News