செய்திகள்

கருப்பு பணத்தை மாற்றிய வழக்கு: டெல்லி வக்கீல் கைது

Published On 2016-12-29 09:57 GMT   |   Update On 2016-12-29 09:57 GMT
கருப்பு பணத்தை மாற்றிய வழக்கு தொடர்பாக விசாரணையின் அடிப்படையில் வக்கீல் ரோகித் தண்டன் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
புதுடெல்லி:

உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் கருப்பு பணவேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள சட்ட நிறுவனத்தில் சமீபத்தில் வருமான வரித்துறையும், குற்றப்பிரிவு போலீசாரும் நடத்திய சோதனையில் ரூ.13.6 கோடி சிக்கியது. இதில் ரூ.2.6 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் ஆகும்.

இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வக்கீல் ரோகித் தண்டனிடம் விசாரணை நடத்தினர். சென்னையை சேர்ந்த சேகர்ரெட்டி, வக்கீல் தண்டன் ஆகியோருக்கு ரூ.27 கோடிக்கு மேல் பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றிகொடுத்ததற்காக கொல்கத்தா தொழில் அதிபர் பராஸ்மால் லோதா கைதாகி இருந்தார். இவர்களுக்கு உடந்தையாக இருந்த டெல்லி கோடக் மகேந்திரா வங்கியின் மேலாளர் ஆசிஷ்குமார் நேற்று கைது ஆனார். சேகர் ரெட்டியை ஏற்கனவே சி.பி.ஐ. கைது செய்து இருந்தது.

ரூ.60 கோடி கருப்பு பணத்தை கைமாற்றிய வழக்கில் வக்கீல் தண்டன் முக்கிய பங்கு வகித்துள்ளார். லோதா, வங்கி மேலாளர் ஆகியோருக்கு உதவிகரமாக செயல்பட்டார்.

விசாரணையின் அடிப்படையில் வக்கீல் ரோகித் தண்டன் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மேலும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

Similar News