செய்திகள்

காங்கிரஸ் - ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் கவுரவம் பார்க்கின்றன: லல்லுபிரசாத் பாய்ச்சல்

Published On 2016-12-28 06:13 GMT   |   Update On 2016-12-28 06:13 GMT
ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதாதளம் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் கவுரவம் பார்க்கின்றன என்று லல்லுபிரசாத் கூறியுள்ளார்.

பாட்னா:

ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து லல்லு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் இன்று பீகாரில் போராட்டம் நடத்துகிறது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்- மந்திரி நிதிஷ்குமாருக்கு நேரடியாக அழைப்பு விடுத்தனர்.

ஆனால், இந்த பேராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக ஐக்கிய ஜனதாதளம் செய்தி தொடர்பாளர் நீரஜ்குமார் கூறும்போது, பண பிரச்சினை தொடர்பாக 50 நாட்கள் கழித்துதான் தனது முடிவை கூறுவேன் என்று நிதிஷ்குமார் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்.

எனவே, 50 நாட்கள் கழித்த பிறகுதான் அவர் தனது முடிவை எடுப்பார். எனவே தான் இந்த போராட்டத்தில் நிதிஷ்குமாரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார். காங்கிரசும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாது என்று மாநில தலைவர் அசோக் சவுத்ரி கூறினார்.

இரு கட்சிகளும் கலந்து கொள்ளாதது லல்லு பிரசாத்துக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது:-

சிலர் (காங்கிரஸ்- ஐக்கிய ஜனதாதளம்) நீ பெரியவனா? நான் பெரியவனா? என கவுரவம் பார்த்து கொண்டு இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், ரூபாய் நோட்டு பிரச்சினையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இருக்கின்றன.

இந்த பிரச்சினையால் சாதாரண மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நாங்கள் நடத்தும் முதல் போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும். அடுத்து பாட்னாவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று முன்தினம் லல்லுபிரசாத் அளித்த பேட்டியில் ரூபாய் நோட்டு தொடர்பாக பிரதமர் 50 நாள் அவகாசம் கேட்டார். அதற்குள் தீர்வு காணாவிட்டால் எனக்கு தண்டனை தாருங்கள் என்று கூறினார். அது முடியப்போகிறது. எனவே, மக்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்று கொள்ள பிரதமர் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியினர் கூறும் போது, மாட்டு தீவன ஊழல் விவகாரம் வெளி வந்தபோது நான் தவறு செய்து இருந்தால் மக்கள் என்னை தண்டியுங்கள் என்று லல்லுபிரசாத் கூறினார். ஆனால், கோர்ட்டு அவர் குற்றவாளி என தீர்ப்பு கூறியது. எனவே, லல்லுபிரசாத், மக்கள் தனக்கு என்னை தண்டனை வழங்க வேண்டும் என்று அறிவிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

Similar News