செய்திகள்

கான்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன: 50 பேர் காயம்

Published On 2016-12-28 03:00 GMT   |   Update On 2016-12-28 03:00 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் அருகே அஜ்மீர்-சியல்டா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டு, கவிழ்ந்த விபத்தில் சுமார் 50 பேர் காயமடைந்ததாக முதல்கட்ட வெளியாகியுள்ளது.
லக்னோ:

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட அஜ்மீர்-சியல்டா எக்ஸ்பிரஸ் ரெயில், உத்தரப்பிரதேசம் மாநிலம் வழியாக கொல்கத்தா நகரை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்தது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரில் சில பயணிகளை இறக்கிவிட்டு, புறப்பட்டுச் சென்ற அந்த ரெயில், இன்று அதிகாலை சுமார் 6 மணியளவில் கான்பூரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ருரா ரெயில் நிலையம் அருகே  தண்டவாளத்தைவிட்டு விலகிச்சென்று, பக்கவாட்டில் தடம்புரண்டது.

இதில், அந்த ரெயிலின் 14 பெட்டிகள் ஒன்றின்மீது மற்றொன்று பயங்கரமாக மோதியதால் பெட்டிகளின் உள்ளே தூங்கி கொண்டிருந்த பயணிகள் பீதியால் அலறித் துடித்தனர்.

இவ்விபத்து பற்றிய தகவல் அறிந்து, விரைந்துவந்த மீட்புக் குழுவினர், கவிழ்ந்து கிடந்த ரெயில் பெட்டிகளுக்குள் சிக்கி, உயிருக்குப் போராடிய பலரை வெளியே மீட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் சுமார் 50 பேர் காயமடைந்திருந்ததாகவும், இவ்விபத்தினால் உயிர்பலி ஏதும் இல்லை எனவும் கான்பூரில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.

காயமடைந்த பயணிகள் அனைவரும் முதலுதவிக்கு பின்னர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஓரிருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.



தண்டவாளத்தின் குறுக்கே கவிழ்ந்து கிடக்கும் ரெயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த பாதை வழியாக செல்லும் பிற ரெயில்கள் வேறு மார்க்கங்களில் திருப்பி விடப்பட்டுள்ளன.

இவ்விபத்து பற்றிய தகவல் வெளியானதும், காயமடைந்தவர்கள் அனைவருக்கும் உரிய இழப்பீடு அளிக்கப்படும் என ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

Similar News