செய்திகள்

என் பெயரில் ஜன்தன் வங்கி கணக்கில் ரூ.100 கோடி வந்தது எப்படி?: பிரதமர் அலுவலகத்துக்கு பெண் கடிதம்

Published On 2016-12-27 09:11 GMT   |   Update On 2016-12-27 09:11 GMT
எனது பெயரில் உள்ள ஜன்தன் வங்கி கணக்கில் ரூ.100 கோடி வந்தது எப்படி என்று பிரதமர் அலுவலகத்துக்கு உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த பெண் கடிதம் எழுதியுள்ளார்.

காசியாபாத்:

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் ஜிலேதர் யாதவ். இவரது மனைவி சீதல் யாதவ்.

இவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பிரதமர் அறிவித்த ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்து உள்ளார்.

இவரது ஜன்தன் வங்கி கணக்கில் யாரோ ரூ.100 கோடியை டெபாசிட் செய்துள்ளார். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இதுதொடர்பாக அவரது கணவர் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 18-ந்தேதி எனது வீட்டு அருகே உள்ள வங்கி ஏ.டி.எம்.மில் மனைவி சீதல் பணம் எடுக்க சென்றார். அப்போது அவரது வங்கி கணக்கில் ரூ.99,99,99,394 இருப்பதாக கணக்கு காட்டியது.

இதை நம்பாமல் வேறு ஏ.டி.எம்.களுக்கு சென்று பார்த்தபோது இந்த பணம் இருப்பது தெரிய வந்தது. எனது மனைவி வங்கி கணக்கில் இந்த பணம் எப்படி வந்தது என்பது பற்றி வங்கிக்கு சென்று கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை. அலைகழிக்கப்பட்டேன்.

இதனால் ரூ.100 கோடி பணம் வங்கி கணக்கில் எப்படி வந்தது என்பது குறித்து பிரதமர் அலுவலகம் விசாரித்து தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News