செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு: பிரதமருக்கு எதிரான ஆதாரம் குண்டு துளைக்காத ரகசியம் - ராகுல்காந்தி

Published On 2016-12-16 05:52 GMT   |   Update On 2016-12-16 05:52 GMT
பிரதமருக்கு எதிராக தன்னிடம் பலமான, பாதுகாப்பான ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

உயர் மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தார். அன்றிலிருந்து பிரதமரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

அதோடு அவரது தலைமையில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தன்னை பேச அனுமதித்தால் பூகம்பமே ஏற்படும் என்று ராகுல் எச்சரித்து இருந்தார். அதோடு பணத்தின் மதிப்பை இழக்க செய்தது மிகப்பெரிய ஊழல் என்றும் கூறி இருந்தார்.

இதற்கிடையே பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஊழல் தொடர்பான முழு விவரங்கள் தன்னிடம் இருக்கிறது என்று ராகுல்காந்தி நேற்று முன்தினம் பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.

இந்த ஊழல் விவரங்களை பாராளுமன்றத்தில் நான் தெரிவித்தால் தன்னை பற்றி மோடி உருவாக்கி வைத்துள்ள மிகப்பெரிய பிம்பம் உடைந்து விடும் என்று தெரிவித்தார்.

ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. தவறான பேச்சுக்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பா.ஜனதா தெரிவித்தது.

அதே நேரத்தில் பிரதமர் மோடியின் ஊழல் குறித்த ஆவணங்கள் இருந்தால் அதனை ராகுல்காந்தி உடனடியாக வெளியிட வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிரான ஊழல் புகார் ஆதாரம் குண்டு துளைக்காதது, அது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் தன்னை பேச விடாமல் பிரதமர் தடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Similar News