செய்திகள்

வலுக்கும் புயல்: அந்தமானில் இருந்து 425 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

Published On 2016-12-09 13:58 GMT   |   Update On 2016-12-09 13:58 GMT
புயல் சின்னம் வலுத்துள்ள நிலையில் அந்தமானில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளில் 425 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
போர்ட்பிளேர்:

அந்தமான், நிகோபார் தீவுகளில் நீல், ஹேவ்லாக் ஆகிய இரு தீவுகளும் சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரிகள் ஆகும். இங்கு உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர்.

இந்த நிலையில் வங்க கடலின் தென் கிழக்கில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அந்தமான் தீவுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. காற்றும் வேகமாக வீசி வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறுகிற அபாயம் உள்ளதால் மழை தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் மழையால் நீல், ஹேவ்லாக் தீவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு முகாமிட்டிருந்த சுமார் 1500 சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சிவில் நிர்வாகம் அவர்களை பத்திரமாக மீட்குமாறு அந்தமான், நிகோபார் டிரை சர்வீஸ் கமாண்ட் படைப்பிரிவை கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து அவர்களை மீட்பதற்கான பணியை படையினர் நேற்று தொடங்கினர். இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்கள் 6 கப்பல்களில் அந்தமான் சென்று சுற்றுலா பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலை நிலவரப்படி ஹேவ்லாக் தீவில் தற்போது முகாமிட்டுள்ள மீட்புக்குழுவினர், 425 சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

Similar News