செய்திகள்

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி கைது

Published On 2016-12-09 12:47 GMT   |   Update On 2016-12-09 12:47 GMT
ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் வழக்கில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி, கவுதம் கேதான், சஞ்சீவ் தியாகி ஆகியோரை சி.பி.ஐ இன்று கைது செய்துள்ளது.
புது டெல்லி:

கடந்த 2010-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து மிகமுக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத் தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பின்னர், அவர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே, இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது இத்தாலியில் உள்ள மிலன் நகர கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு அண்மையில் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதையும் கோர்ட்டு உறுதி செய்தது.

இதனைத் தொடர்ந்து எஸ்.பி.தியாகி மற்றும் அவரை சேர்ந்தவர்களிடம் சி.பி.ஐ தீவிர விசாரணை நடத்தியது. விசாரணையில் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் விமானப்படைத் தளபதி எஸ்.பி.தியாகி 10 முறை இத்தாலிக்கு பயணம் செய்த விவரங்கள் வெளியாகின.

கடந்த 2004-ம் ஆண்டு தியாகி துணை தளபதியாக இருந்தபோது அவரை பின்மெக்கானிக்கா நிறுவனம் அணுகிஉள்ளது. பின்னர் தியாகி தளபதியாக அறிவிக்கப்பட்ட பின்னர் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தரகர்கள் கைடோ ஹாஸ்க்கே மற்றும் கார்லோ கிரோசா அவரை சந்தித்து பேசி உள்ளனர். பெங்களூரில் விமானப்படை சாகசம் நடைபெற்ற போதும் தரகர்கள் அவரை சந்தித்து பேசி உள்ளனர். பின்னர் தியாகியின் உறவினர் அலுவலகத்தில் வைத்தும் சந்தித்து பேசினர் என்றும் தியாகி மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

இந்நிலையில் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி, சஞ்சீவ் தியாகி வழக்கறிஞர் கவுதம் கேதான் ஆகியோரை சி.பி.ஐ இன்று கைது செய்துள்ளது. அவர்கள் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய விசாரணை அமைப்பினால் விமானப்படை முன்னாள் தளபதி கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு 2005-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபோது அதில் அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் இந்திய ஒப்பந்தத்தை பெறும் வகையில், அவற்றின் ஹெலிகாப்டர்கள் பறக்கும் உயரத்துக்கு ஏற்ப, அதாவது 19 ஆயிரம் அடி உயரம் என்பதை 15 ஆயிரம் அடியாக குறைத்ததாக எஸ்.பி.தியாகி மீது சிபிஐ குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Similar News