செய்திகள்

பஞ்சாபில் மூடு பனியால் விபத்து: 12 ஆசிரியர்கள் பலி

Published On 2016-12-09 08:22 GMT   |   Update On 2016-12-09 08:26 GMT
பஞ்சாபில் மூடுபனியால் நடந்த சாலை விபத்தில் 12 ஆசிரியர்களும், டிரைவரும் பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமிர்தசரஸ்:

பஞ்சாபில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ரோட்டில் புகை போன்று பனி மூடிக் கிடக்கிறது. எதிரில் வரும் வாகனங்கள் தெரிய வில்லை. எனவே, முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் இன்று பஞ்சாப் மாநிலத்தில் பஷில்கா மாவட்டத்தில் மூடுபனியால் பெரும் சாலை விபத்து ஏற்பட்டது. அங்கு அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேனை வாடகைக்கு அமர்த்தி அதன் மூலும் பணியிடங்களுக்கு சென்று வருகின்றனர்.

அது போல் இன்று காலை 8.15 மணியளவில் பள்ளி ஆசிரியர்களுடன் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. காண்ட் மாத்ரி என்ற கிராமம் அருகே சென்ற போது மூடுபனி அதிகம் இருந்தது. எதிரே வந்த வாகனம் தெரியவில்லை.

இருந்தாலும் முன்னால் சென்ற ஒரு வாகனத்தை வேன் டிரைவர் முந்த முயன்றார். அப்போது எதிரே வந்த லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. அதில் வேனில் பயணம் செய்த 12 ஆசிரியர்கள் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் வேன் டிரைவரும் உயிரிழந்தார்.

இந்த வேனில் 15 ஆசிரியர்கள் பயணம் செய்தனர். இந்த தகவலை பஞ்சாப் கல்வி மந்திரி தல்ஷித் சிங் சீமா தெரிவித்தார்.

வட இந்தியாவில் பல மாநிலங்களில் கடும் மூடுபனி நிலவுகிறது. புது டெல்லியில் நிலவும் மூடுபனியால் 9 சர்வதேச விமானங்களும், 15 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக வந்தன.

Similar News