செய்திகள்

இண்டர்நெட் இல்லாமல் பேடிஎம் பயன்படுத்தலாம் : புதிய சேவை அறிவிப்பு

Published On 2016-12-07 11:13 GMT   |   Update On 2016-12-07 11:13 GMT
ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் வசதி இல்லாதவர்களும் பேடிஎம் பயன்படுத்த புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புது டெல்லி:

இந்தியாவில் இண்டர்நெட் இணைப்பு பெறாதவர்களும் பேடிஎம் சேவைகளை பயன்படுத்த அந்நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதற்கென பேடிஎம் புதிய கட்டணமில்லா அழைப்பு எண் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த நம்பரை இண்டர்நெட் இணைப்பு இல்லாதவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

பேடிஎம் அறிவித்திருக்கும் கட்டணமில்லா எண் 180018001234-ஐ டயல் செய்து பேடிஎம் சேவைகளை பயன்படுத்த முடியும். இண்டர்நெட் இணைப்பு கோளாறாக இருப்பது மற்றும் அடிக்கடி இணைப்பு துண்டிக்கப்படும் போது பயனர்கள் இந்த கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு பேடிஎம் சேவைகளை பயன்படுத்த முடியும். 

பேடிஎம் கட்டணமில்லா எண் சேவையை பயனர்கள் மற்றும் விற்பனையாளர்களும் பயன்படுத்த முடியும். புதிய கட்டணமில்லா எண்ணிற்கு அழைப்பு விடுத்து பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். நாடெங்கும் வங்கி மற்றும் எடிஎம் மையங்களில் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் நிலையில் டிஜிட்டல் முறையில் பயனர்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்க இத்திட்டம் வழி செய்யும். 

ஏற்கனவே பேடிஎம் சேவைக்கு பதிவு செய்திருக்கும் பயனர்கள், இந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்து தங்களின் மொபைல் நம்பர் பதிவு செய்து நான்கு இலக்கு கடவுச்சொல் பதிவு செய்ய வேண்டும். பேடிஎம் சேவைகளை கொண்டு மொபைல் ரீசார்ஜ், கால் டாக்ஸி, பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், மருந்தகம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்படுத்த முடியும். 

'பெரும்பாலான இந்தியர்களை பணமில்லாமல் டிஜிட்டல் முறையில் பரிமாற்றங்களை மேற்கொள்ளச் செய்யும் நோக்கில் பேடிஎம் சேவை துவங்கப்பட்டது. இந்த நோக்கத்தின் அடுத்தக்கட்ட முயற்சியாக கட்டணமில்லா அழைப்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஸ்மார்ட்போன் இல்லாத இந்தியர்களை பணமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வழி செய்யும்'' என பேடிஎம் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் நிதின் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

Similar News