செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மானநஷ்ட வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் அருண் ஜெட்லி ஆஜர்

Published On 2016-12-06 20:37 GMT   |   Update On 2016-12-06 20:37 GMT
அரவிந்த் கெஜ்ரிவால் மீது அருண் ஜெட்லி தொடர்ந்த மானநஷ்ட வழக்கு விசாரணைக்காக, அருண் ஜெட்லி டெல்லி ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார். 1½ மணி நேரம் சாட்சியம் அளித்தார்.
புதுடெல்லி:

அரவிந்த் கெஜ்ரிவால் மீது அருண் ஜெட்லி தொடர்ந்த மானநஷ்ட வழக்கு விசாரணைக்காக, அருண் ஜெட்லி டெல்லி ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார். 1½ மணி நேரம் சாட்சியம் அளித்தார்.

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை, டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தார். அப்போது, அச்சங்கத்தில் ஏராளமான நிதி முறைகேடுகள் நடந்ததாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும், அவருடைய கட்சியினரும் குற்றம் சாட்டினர்.

இதற்காக, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் 5 பேர் மீது டெல்லி ஐகோர்ட்டில் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ரூ.10 கோடி மான நஷ்டஈடு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார்.

கடந்த ஜூலை மாதம் டெல்லி ஐகோர்ட்டு, இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளதா என்பதை முடிவு செய்ய ஐகோர்ட்டின் இணை பதிவாளருக்கு வழக்கை அனுப்பியது.

இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் உள்ள இணை பதிவாளரின் கோர்ட்டில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பகல் 2 மணிக்கு ஆஜர் ஆனார். அவருடன் மூத்த வக்கீல்களும் ஆஜர் ஆனார்கள்.

தனது குற்றச்சாட்டுக்கு தொடர்பாக அருண் ஜெட்லி சாட்சியம் அளித்தார். வழக்குடன் ஏற்கனவே தாக்கல் செய்த ஆவணங்கள் மற்றும் கோப்புகள் உண்மையானதுதான் என்று அவர் உறுதி செய்தார். புதிய ஆவணங்களையும் அவருடைய வக்கீல்கள் தாக்கல் செய்தனர்.

இதன் அடுத்தகட்டமாக, அருண் ஜெட்லியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட உள்ளது. அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜராக உள்ள மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி வெளிநாடு செல்வதால், குறுக்கு விசாரணையை நீண்ட காலத்துக்கு தள்ளிவைக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலின் வக்கீல்கள் கேட்டுக்கொண்டனர். அவர்கள் வழக்கு விசாரணையை தேவையின்றி தாமதப்படுத்துவதாக அருண் ஜெட்லியின் வக்கீல்கள் குற்றம் சாட்டினர்.

இருப்பினும், அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 6-ந் தேதிக்கு ஐகோர்ட்டு ஒத்திவைத்தது. அன்றைய தினம், அருண் ஜெட்லியிடம் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்துவார்கள்.

நேற்றைய விசாரணை 1½ மணி நேரம் நீடித்தது. அதன்பிறகு, அருண் ஜெட்லியும், அவருடைய வக்கீல்களும் ஐகோர்ட்டு வக்கீல்கள் சிற்றுண்டி விடுதிக்கு சென்றனர். 

Similar News