செய்திகள்

இந்தியாவில் ஏடிஎம் மையங்கள் ஹேக் செய்யப்படலாம் : வல்லுநர்கள் எச்சரிக்கை

Published On 2016-12-04 14:29 GMT   |   Update On 2016-12-04 14:29 GMT
இந்திய வங்கிகள் தங்களின் ஏடிஎம் மையங்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சைபர் பாதுகாப்பு துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட பின் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மக்கள் தங்களது பணத்தை எடுக்க வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் வரிசையில் காதிருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் ஏடிஎம் மையங்கள் ஹேக் செய்யப்படலாம் என இன்டெல் பாதுகாப்பு பிரிவு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக அறியப்படும் இன்டெல் செக்யூரிட்டி, வங்கி சார்ந்த ஹேக்கிங் சம்பவங்கள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்படலாம் என தெரிவித்துள்ளது. அதன்படி ஏடிஎம் மையங்கள், வங்கி தகவல் மையம், நெட்வொர்க் அல்லது மொபைல் பேங்கிங் உள்ளிட்ட சேவைகளில் சைபர் தாக்குதல்கள் நடத்தப்படலாம். இதில் ஏடிஎம் மையங்கள் ஹேக்கர்களின் மிக எளிதாக தாக்கக் கூடியதாக இருக்கிறது என இன்டெல் செக்யூரிட்டி நிறுவனத்தின் தெற்காசிய பிரிவு நிர்வாக தலைவர் ஆனந்த் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஏடிஎம் மையங்கள் இதுவரை ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. கோபால்ட் என்ற ஹேக்கிங் குழுவினர், கடந்த மாதம் ஐரோப்பாவின் தேர்வு செய்யப்பட்ட ஏடிஎம் மையங்களில் சைபர் தாக்குதல் நடத்தினர். இதில் ஹேக் செய்யப்பட்ட ஏடிஎம் இயந்திரங்கள் பணத்தை தானாக வழங்கின. இதே போல் சில மாதங்களுக்கு முன் இந்திய வங்கிகளின் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி வந்த பெரும்பாலான பயனர்களின் தரவுகள் திருடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்படும்போது அவற்றை பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பினபற்ற வேண்டியது அவசியம் ஆகும்.

Similar News