செய்திகள்

தெலுங்கானாவில் பண தட்டுப்பாட்டால் இன்று நடக்க இருந்த 50 ஆயிரம் திருமணங்கள் தள்ளிவைப்பு

Published On 2016-12-04 06:04 GMT   |   Update On 2016-12-04 06:04 GMT
தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் பண தட்டுப்பாட்டால் இன்று நடக்க இருந்த 50 ஆயிரம் திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐதராபாத்:

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டால் திருமண வீட்டார் தங்கள் குடும்ப திருமணத்தை சிறப்பாக நடத்த முடியாமல் தவிக்கிறார்கள். இதில், தெலுங்கானா மாநிலம் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

அந்த மாநிலத்தில் இது முக்கிய திருமண சீசன் ஆகும். அதுவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசே‌ஷ முகூர்த்த நாள் ஆகும். எனவே இன்று ஏராளமான திருமணங்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், செலவுக்கு பணம் திரட்ட முடியாத நிலை இருந்ததால் பல திருமணங்களை தள்ளி வைத்து விட்டனர். இந்த மாநிலத்தில் மட்டும் இன்று நடக்க இருந்த 50 ஆயிரம் திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமண வீட்டார் தங்கள் செலவுகளுக்கு ரூ.2½ லட்சம் வரை வங்கிகளில் இருந்து பணம் எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணம் திருமண செலவுக்கு போதாது என்றாலும், இந்த ரூ.2½ லட்சம் பணத்தை கூட வங்கிகளில் இருந்து எடுக்க முடியவில்லை.

ஏனென்றால், இந்த பணத்தை எடுப்பதற்கு பல விதிமுறைகளை வகுத்து இருந்தனர். அதன்படி திருமணம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றை வங்கியில் வழங்க வேண்டும். அது மட்டுமல்ல, எந்த வியாபாரியிடம் பொருள் வாங்க போகிறோம் என்று தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் அந்த வியாபாரியின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்த முடியாது. சுவிப் மெஷின் அல்லது ஆன்-லைன் வர்த்தகம் மூலமே பண பரிமாற்றம் நடக்க வேண்டும். மேலும் அந்த வியாபாரிகளின் விவரங்களையும் கொடுத்துதான் பணத்தை பெற முடியும். இப்படி பல சிக்கல்கள் உள்ள விதிமுறைகளை வகுத்து இருந்ததால் அதை திருமண வீட்டாரால் நிறைவேற்ற முடியவில்லை.

இது மட்டுமல்ல, ரூ.2½ லட்சம் கேட்டு வங்கியில் விண்ணப்பித்தாலும் அந்த பணத்தை கொடுப்பதற்கு வங்கியிலும் பணம் இல்லை. எனவே, பாதி பணம் தான் தர முடியும் என்று வங்கியில் கூறுகிறார்கள். இப்படி பல பிரச்சனைகள் எழுந்ததால் வேறு வழியில்லாமல் திருமணத்தையே தள்ளி வைத்து விட்டனர்.

மதபூரை சேர்ந்த சந்திரிகா என்ற பெண் தனது ஒரே மகள் திருமணத்துக்காக வீட்டை விற்று வங்கியில் பணம் போட்டு வைத்திருந்தார். மகளுக்கு இன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாததால் திருமணத்தையே தள்ளி வைத்து விட்டார்.

இதுபற்றி சந்திரிகா கூறும் போது, எனது ஒரே மகள் திருமணத்தை நடத்த வீட்டை விற்று விட்ட நிலையிலும், அந்த திருமணத்தை நடத்த முடியாமல் நான் தவிக்கிறேன். எனது பணம் எனது கணக்கில் இருந்தும் அதை எடுக்க முடியாமல் ஒரு இக்கட்டான நிலையை ஏற்படுத்தி விட்டார்கள் என்று வேதனையுடன் கூறினார்.

Similar News