செய்திகள்

அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் 48 மணி நேரத்தில் புயலாக மாறுகிறது

Published On 2016-12-03 05:10 GMT   |   Update On 2016-12-03 09:13 GMT
அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுநிலை 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

தென்மேற்கு வங்க கடலில் உருவான நடா புயல் வலு இழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று அதிகாலை காரைக்கால் அருகே கரையை கடந்தது. புயல் கடலூரை தாக்கும் என்று அஞ்சப்பட்ட நிலையில் வலு இழந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். மழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை.

காரைக்கால் கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக மாறி உள் தமிழ்நாடு மற்றும் அதனையொட்டிள்ள பகுதியில் நிலை கொண்டு இருந்தது. பின்னர் அது கேரளா மற்றும் அதனையொட்டிய அரபிக்கடல் பகுதிக்கு சென்றது. அந்த இடத்திலேயே மேல்அடுக்கு சுழற்சியாக பரவியுள்ளது.

இந்த நிலையில் மலேசிய தீப கற்ப பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் (நாளை) புதிய காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகிறது.

இது படிப்படியாக வலுவடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக (புயல் சின்னம்) மாறும் என்று டெல்லி இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் சின்னம் தீவிரம் அடையுமா, எந்த திசை நோக்கி நகரும், தமிழகத்தை தாக்குமா? என்பது குறித்து வானிலை அதிகாரியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

தென்கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நாளை உருவாகிறது. அது புயலாக மாறி வரும் 9-ந்தேதி ஆந்திரா-ஒடிசா கடற்கரை வழியாக கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த புயல் தமிழக கடற்கரை நோக்கி வந்தால்தான் தமிழகத்தில் பலத்த மழையை எதிர்பார்க்க முடியும்.

தமிழக கடற்கரை நோக்கி வரும் வாய்ப்பு இல்லாமல் போனால் அடுத்த 10 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏரிகளுக்கு 7 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News