செய்திகள்

காகித பணம் இல்லாத வரவு செலவுக்கு மக்கள் மாற வேண்டும்: பிரதமர் மோடி

Published On 2016-12-02 23:56 GMT   |   Update On 2016-12-02 23:56 GMT
வலிமையான இந்தியாவை உருவாக்க காகித பணம் இல்லாத வரவு செலவுக்கு மக்கள் மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:

வலிமையான இந்தியாவை உருவாக்க காகித பணம் இல்லாத வரவு செலவுக்கு மக்கள் மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ‘லிங்க்டுஇன்’ என்ற சமூக வலைத்தளத்தில் நாட்டு மக்களுக்கு எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

கருப்பு பணம், ஊழலை ஒழிக்க நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று வெளியிட்ட அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்கது ஆகும். 21-ம் நூற்றாண்டில் இந்தியாவில் எங்கும் கருப்பு பணம், ஊழல் இருக்கக்கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம். இந்த அறிவிப்பின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்க்கைத்தரம் முன்னேற்றம் அடையும் என்பதில் சந்தேகமே இல்லை.

சிறு வர்த்தகர்கள் தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றுகின்றனர். எனவே அவர்கள் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி, தங்களை மேம்படுத்திக்கொண்டால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட்டு இருப்பதை நான் அறிவேன். எனினும் எதிர்காலத்தில் ஏற்படும் பலனை கருத்தில் கொண்டு இந்த குறுகியகால சிரமங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். பெரும்பாலான மக்கள் இந்த சிரமத்தை உணர்ந்து அரசின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டார்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இதை கண்கூடாக உணர உத்தரபிரதேசம், கர்நாடகா, கோவா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள கிராமங் கள் மற்றும் நகர்ப்புற மக்களை சந்தித்து ரூபாய் நோட்டு ஒழிப்பால் ஊழல், கருப்பு பணம் குறைந்துள்ளதா? என கேள்வி எழுப்பினேன். அனைவரிடம் இருந்தும் ஆமாம் என்ற பதிலே வந்தது.

அதிக அளவு பண நடமாட்டம் தான் கருப்பு பணம், ஊழலுக்கு காரணமாக உள்ளது. இதனை ஒழிக்க காகித பணம் இல்லாத வரவு செலவுக்கு மக்கள் அனைவரும் மாற வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினர் அனைவரும் வலிமையான இந்தியாவை உருவாக்க காகித பணம் இல்லாத வரவு செலவு செய்து மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

நாம் இப்போது நவீன தொழில்நுட்ப யுகத்தில் இருக்கிறோம். நம்மில் பலர் ‘மொபைல் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு’ போன்றவற்றை பல்வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதை அனைத்து தரப்பு மக்களும் உபயோகித்து காகித பணம் இல்லாத வரவு செலவை ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Similar News