செய்திகள்

காஷ்மீர்: பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது

Published On 2016-12-02 10:19 GMT   |   Update On 2016-12-02 10:19 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று தடையைமீறி பேரணி நடத்த முயன்ற பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனிநாடு அங்கீகாரம் வேண்டும், பாகிஸ்தானுடன் இணைவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் என இங்குள்ள பல்வேறு பிரிவினைவாத இயக்கங்கள் போராடி வருகின்றன. இவற்றில் யாசின் மாலிக் என்பவர் தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கமும் ஒன்றாகும்.

தீவிரவாதி புர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னர், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் மூன்று மாதங்களாக வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஜும்மா எனப்படும் கூட்டுத் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் இந்த தடை தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஸ்ரீநகரில் உள்ள பிரபல மசூதியில் ஜும்மா தொழுகை நடைபெற்றது. தொழுகைக்கு பின்னர் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத் தலைவர் யாசின் மாலிக், தனது ஆதரவாளர்களுடன் மசூதியில் இருந்து பேரணியாக புறப்பட்டார்.

நகரின் மையப்பகுதியான லால் சவுக் என்ற இடத்தை நோக்கி அவர் செல்ல முயன்றபோது மைசுமா என்ற பகுதியில் அவரை வழிமறித்த போலீசார், யாசின் மாலிக்கையும் அவருடன் வந்த மற்றவர்களையும் கைது செய்தனர்.

இதற்கு முன்னர் பலமுறை இவர் கைது செய்யப்பட்டதும், வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருந்ததும் நினைவிருக்கலாம்.

Similar News