செய்திகள்

பாதுகாப்புடன் அச்சிடப்படுவதால் புதிய நோட்டுகள் தாமதம்: அருண்ஜெட்லி விளக்கம்

Published On 2016-12-02 07:58 GMT   |   Update On 2016-12-02 07:58 GMT
பாதுகாப்புடன் அச்சிடப்படுவதால் புதிய நோட்டுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் 70 ஆண்டுகளாக கருப்பு பணம் உள்ளது. அவற்றை வலிமையோடு எதிர் கொண்டு புதிய நடைமுறையை உருவாக்க விரும்புகிறோம்.

எனவே தான் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை சீரடைந்தவுடன் தொழில் நுட்பத்தில் பணபரிமாற்றம் அதிகமாகும். வரிமுறை மற்றும் வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும்.

வர்த்தகம் மற்றும் வியாபாரம் பெருகும். அதே நேரத்தில் பணம் உபயோகிக்கும் அளவு குறையும். கடந்த ஆண்டை போல இந்தியாவின் பொருளாதாரம் அதிக அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

ரபி பருவத்தில் விவசாயம் அதிகரித்துள்ளது. வாகனங்களின் விற்பனையும் கூடியுள்ளது. தற்போது சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில் பல நன்மைகள் உருவாகும். தற்போது ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளதை நாட்டு மக்கள் வரவேற்றுள்ளனர்.

புதிய ரூபாய் நோட்டுகள் பாதுகாப்புடன் அச்சிடப்படுகின்றன. அதனால் தான் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News