செய்திகள்

உடல் உறுப்பு தானத்தால் 4 பேரை வாழவைத்த இளைஞர்: 149 கி.மீ. தூரத்தை 1 மணி 50 நிமிடங்களில் கடந்த இதயம்

Published On 2016-12-01 12:23 GMT   |   Update On 2016-12-01 12:23 GMT
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயத்தை வெறும் 1 மணி நேரம் 50 நிமிடங்களில் 149 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அதற்காக காத்திருந்த சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. இதன் மூலம் அந்த சிறுவன் மறுவாழ்வு பெற்றுள்ளான்.
புனே:

கடந்த மாதம் 27-ம் தேதி கோவாவில் இருந்து தனது நண்பனுடன் திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மகாராஷ்டிர மாநிலம் சதாரா அருகே விபத்தில் சிக்கினார். கார் மோதியதால் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக சதாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் பலத்த காயங்களுடன் இருந்த அந்த இளைஞர், அதே நாளில் மேல்சிகிச்சைக்கக புனேயில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நவம்பர் 28-ம் தேதி அந்த இளைஞர் மூளைச்சாவு அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து ரூபி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் அந்த இளைஞரின் பெற்றோரிடம் உடல் உறுப்பு தானம் குறித்து எடுத்துக் கூறினர். இதற்கு அவரின் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள, அந்த இளைஞரிடமிருந்து கல்லீரல், இதயம், இரண்டு கிட்னிகள் போன்ற உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

சதாரா பகுதியை சேர்ந்த உடல் உறுப்பு ஒருங்கிணைப்பு குழுவினரிடம் இளைஞரின் உறுப்பு தானம் குறித்த விவரத்தை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரின் இதயம், கல்லீரல், இரண்டு கிட்னிகள் ஆகியவை மும்பை, புனே, நாசிக் பகுதியில் அதற்காக காத்திருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

கிட்டத்தட்ட தங்கள் வாழ்நாளின் இறுதிநாளை எதிர்பார்த்துக் காத்திருந்த நான்கு நோயாளிகள் மூளைச்சாவு அடைந்த இளைஞரால் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

குறிப்பாக முலுந்த் (மும்பை) பகுதியை சேர்ந்த மலர் மருத்துவமனையில் 15 வயதுடைய சிறுவன் இரண்டு மாதங்களாக இதயத்திற்கு காத்திருந்து அது கிடைக்காததால் தனது வாழ்நாளின் இறுதி நாளை எண்ணிக் கொண்டிருந்தான். தற்போது அவனுக்கு புது இதயம் கிடைத்துள்ளது.

புனேயில் இருந்து மும்பையின் முலுந்த் பகுதிக்கு வழக்கமான பயண தூரம் 2 மணி 30 நிமிடங்கள். ஆனால் மருத்துவர்கள், போக்குவரத்து காவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் 149 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி 50 நிமிடங்களில் கடந்து இதயத்தை கொண்டு சேர்த்து பொருத்தப்பட்டது. இதன்மூலம், அந்த சிறுவன் புதுவாழ்வு பெற்றுள்ளான்.

Similar News