செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்ததில் நீதிமன்ற உத்தரவை மீறவில்லை: மத்திய அரசு வாதம்

Published On 2016-12-01 11:43 GMT   |   Update On 2016-12-01 11:43 GMT
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறவில்லை என, இன்றைய வாதத்தின்போது மத்திய அரசு தெரிவித்தது.
புதுடெல்லி:

மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. இதனால், ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்த சமயத்தில், உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துவிட்டது. இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கை ஏற்று சுப்ரீம் கோர்ட் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்தது.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், 2014–ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த தடையை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனு கடந்த மாதம் 17-ம்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

அத்துடன், ஜல்லிக்கட்டை அனுமதித்து மத்திய அரசு பிறப்பித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு தடைகோரும் மனுக்கள் மீதான விசாரணை டிசம்பர் 1–ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி, ஜல்லிக்கட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டுக்கு நாங்கள் தடை விதிக்கும்போது அறிவிக்கை மூலம் எப்படி அனுமதி வழங்கலாம்? என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, ஜல்லிக்கட்டு விஷயத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு எதையும் மத்திய அரசு மீறவில்லை என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், ஜல்லிக்கட்டு என்பது ரேசோ அல்து பொழுதுபோக்கு விளையாட்டோ அல்ல என்று கூறிய அவர், கிராம மக்கள் கொண்டாடும் திருவிழாக்கால விளையாட்டு என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Similar News