செய்திகள்

மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி நிதிஷ்குமார் குறித்து ராப்ரிதேவி விமர்சனம்

Published On 2016-11-30 05:39 GMT   |   Update On 2016-11-30 05:39 GMT
மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி நிதிஷ்குமார் குறித்து ராப்ரிதேவி விமர்சனம் செய்ததால் ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா:

பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் - ராஷ்ட்ரிய ஜனதாளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக உள்ளார்.

ரூபாய் நோட்டு பிரச்சனையில் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையை நிதிஷ்குமார் பாராட்டினார். அதே நேரத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மோடி எடுத்த நடவடிக்கையை நிதிஷ்குமார் பாராட்டியதற்காக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுசில்குமார்மோடி வரவேற்பு தெரிவித்திருந்தார். மேலும் அவர் இதுபற்றி கூறும்போது, நிதிஷ்குமார் பாரதிய ஜனதா கூட்டணிக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி லல்லுபிரசாத் மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி கூறும்போது, சுசில்குமார் மோடி வேண்டுமானால் நிதிஷ்குமாரை இங்கிருந்து எடுத்து சென்று தனது சகோதரியை திருமணம் செய்து வைக்கட்டும் என்று கூறினார்.

ராப்ரிதேவியின் இந்த கருத்து ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராப்ரிதேவி கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஷியாம்ராஜக் கூறும்போது, மூத்த தலைவர்கள் தங்களது வார்த்தைகளை கவனமுடன் வெளியிட வேண்டும் என்று கூறினார்.

ராப்ரிதேவியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து அவர் இதுபற்றி வேறு விளக்கம் அளித்தார். அதில், நான் ஒரு பேச்சுக்காக சாதாரணமாக சொன்னேன். தவறான நோக்கத்தில் சொல்லவில்லை என்று கூறினார்.

நிதிஷ்குமாரை அவமதிக்கும் வகையில் ராப்ரிதேவி இப்படி கூறியிருக்கிறார். தனது கூட்டணி தலைவர் இப்படி பேசியிருப்பது தொடர்பாக நிதிஷ்குமார் தான் தனது கருத்தை கூற வேண்டும்.

ராப்ரிதேவி இப்போது மட்டும் திடீரென இப்படி ஒரு கருத்தை கூறவில்லை. ஏற்கனவே ஐக்கிய ஜனதா தளம் -பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்தபோது நிதிஷ்குமார் பற்றியும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் லாலன்சிங் பற்றியும் மோசமான கருத்து ஒன்றை கூறினார்.

இதை எதிர்த்து ராப்ரிதேவி மீது லாலன்சிங் அவதூறு வழக்கு தொடர்ந்தார். பின்னர் அந்த இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைத்ததால் லாலன்சிங் தனது வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News