செய்திகள்

வீடுகளில் தங்கம் வைத்திருக்க கட்டுப்பாடு விதிக்கப்படுமா?: மத்திய அரசு விளக்கம்

Published On 2016-11-26 02:09 GMT   |   Update On 2016-11-26 02:09 GMT
வீடுகளில் தங்கம் வைத்திருப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி:

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட உடன், கணிசமானோர் அந்த நோட்டுகளை கொண்டு தங்கம் வாங்கி பதுக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால், வீடுகளில் தங்கம் வைத்திருப்பதற்கு உச்சவரம்பு என்ற பெயரில் மத்திய அரசு கட்டுப்பாடு விதிக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால், இத்தகவலை மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் நேற்று மறுத்தார். வீடுகளில் தங்கம் வைத்திருப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

இதுபோல், வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பெயரில் உள்ள லாக்கர்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று முன்பு வெளியான தகவலையும் மத்திய அரசு ஏற்கனவே மறுத்துள்ளது.

Similar News