செய்திகள்

இந்தியாவுடன் சண்டையிட்டு தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் பாகிஸ்தான்: மோடி

Published On 2016-11-25 09:35 GMT   |   Update On 2016-11-25 09:35 GMT
முன்னேறுவதற்கான வழியை விட்டுவிட்டு இந்தியாவுடன் சண்டையிடுவதன் மூலம் பாகிஸ்தான் தன்னைத்தானே அழித்துக்கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதின்டா நகரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று நடைபெற்ற அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளியின்மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலகுழந்தைகள் பலியானதை அறிந்த 125 கோடி இந்திய மக்களும் கண்ணீர் வடித்தனர். பாகிஸ்தானின் வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்ந்தனர்.

பாகிஸ்தான் மக்கள் வறுமையில் இருந்து விடுபட விரும்புகின்றனர். அரசியல் ஆதாயத்துக்காக மற்ற நாடுகளுடன் சண்டையிடுவதை விட்டுவிட்டு உள்நாட்டில் உள்ள ஊழல், கருப்புப் பணத்தை எதிர்த்து சண்டையிடுமாறு தங்களது ஆட்சியாளர்களை பாகிஸ்தான் மக்கள் வலியுறுத்த வேண்டும்.

இந்தியாவுக்கு எதிராக சண்டையிடுவதன் மூலம் பாகிஸ்தான் தன்னைத்தானே அழித்துக் கொள்வதுடன் அப்பாவி மக்களையும் கொன்று வருகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

போதுமான பலம் இருந்தும் நமது இந்திய ராணுவத்தினர் முன்பெல்லாம் தங்களது வீரத்தை வெளிக்காட்ட முடியாத நிலை இருந்தது. ஆனால், இப்போது, சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியை கடந்து, 250 கிலோமீட்டர் தூரத்தில் நாம் நடத்திய தாக்குதலால் நமது வீரர்களின் வலிமையை பாகிஸ்தான் பார்க்க நேரிட்டது.

இந்த தாக்குதலுக்கு பிறகு இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத நிலையில் பாகிஸ்தான் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News