செய்திகள்

மாவோயிஸ்டு ஊடுருவலை தடுக்க சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிப்பு

Published On 2016-11-25 08:32 GMT   |   Update On 2016-11-25 08:32 GMT
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாவோயிஸ்டு தீவிரவாதிகள் மிரட்டலை தொடர்ந்து, தற்போது 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா கூறினார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அட்டகாசம் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. அவர்கள் தொடர் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஏற்கனவே சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் மிரட்டல் உள்ளது. இந்த நிலையில் நிலம்பூர் சம்பவத்தை தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தற்போது சபரிமலையில் மண்டல பூஜை நடந்து வருவதால் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்தவண்ணம் உள்ளனர். இதைதொடர்ந்து கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா நேற்று சபரிமலைக்கு சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு மாவோயிஸ்டு தீவிரவாதிகள் மிரட்டலை தொடர்ந்து தற்போது 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிலம்பூர் சம்பவத்திற்கு பிறகு இந்த பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 300 போலீசாரும், துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனவே அய்யப்ப பக்தர்கள் பயமின்றி சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிலம்பூர் சம்பவத்தை தொடர்ந்து மாவோயிஸ்டுகள் வேட்டை கேரளாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக தலைமறைவாக உள்ள 57 மாவோயிஸ்டு தீவிரவாதிகள் பற்றிய விவரங்களை கேரள போலீசார் இணைய தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

மேலும் இவர்களில் 9 பேரின் போட்டோவையும் வெளியிட்டுள்ளனர். 5 பெண் மாவோயிஸ்டு உள்பட 9 பேரின் போட்டோவும் அவர்கள் பற்றிய பின்னணி தகவல்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

கேரளாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் 2014-ம் ஆண்டுக்கு பிறகு தான் அதிகளவில் நடந்துள்ளது. 2014-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி கொச்சி வனப்பள்ளி என்ற இடத்தில் உள்ள அரசு அலுவலகத்தை மாவோயிஸ்டுகள் சூறையாடினர். அதே ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி வயநாடு பகுதியில் கிராம பஞ்சாயத்து அலுவலகம் தாக்கப்பட்டது.

மேலும் 22-ந்தேதி பாலக் காட்டில் செயல்பட்ட வெளிநாட்டு உணவகமும் மாவோயிஸ்டு தாக்குதலுக்கு இலக்கானது. 2015-ம் ஆண்டு பத்தம்திட்டை குளஞ்சேரியில் வன அலுவலகத்தை சூறையாடி அங்குள்ள வாகனங்களுக்கு தீவைத்து மாவோயிஸ்டுகள் வெறியாட்டம் நடத்தினார்கள்.

அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந்தேதி வயநாடு பகுதியில் பிரமோத் என்ற போலீஸ்காரர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. 2016-ம் ஆண்டிலும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் தொடர்ந்தது. கடைசியாக நிலம்பூரில் மாவோயிஸ்டுகள்- போலீசார் துப்பாக்கி சண்டை வரை இது நீடித்து வருகிறது.

நிலம்பூரில் நடந்த துப்பாக்கி சண்டையை தொடர்ந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நிலம்பூர் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் இரவு நேரத்தில் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

Similar News